"வெற்றி வந்ததும் இவ்வளவு ஆணவமா?" - விஜய்யை விளாசும் விசிக!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக மற்றும் விசிக இடையே மூண்டுள்ள வார்த்தைப் போர், அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் அரசியல் முதிர்ச்சியைச் சந்தேகிக்கும் வகையில் விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு விஜய் வெளியிட்ட கருத்தை முன்வைத்து சிந்தனைச் செல்வன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
"ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முந்தைய முரண்பாடுகளை மறந்து அனைத்துத் தலைவர்களின் நன்மதிப்பையும் பெறும் வகையில் விஜய் பெருந்தன்மையாக நடந்திருக்க வேண்டும். ஆனால், வெற்றிச் செய்தி வந்த மறுக்கணமே, 'மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நாள்' என அவர் குறிப்பிட்டது அவரது ஆணவத்தையே காட்டுகிறது" எனச் சாடியுள்ளார்.

தமிழகத்தில் ஆளுநர் மூலம் கொல்லைப்புற வழியாக ஆட்சியைத் திணிக்க பாஜக முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், விஜய்யின் இத்தகைய போக்கு அதற்குத் துணை போவது போல் உள்ளதாகத் தெரிவித்தார்.
திமுக-வை 'மன்னராட்சி' என மறைமுகமாகச் சித்தரித்து விஜய் பேசியது, திமுக கூட்டணியில் உள்ள விசிக-வினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிக தலைமை ஆலோசித்து வரும் நிலையில், இரண்டாம் கட்டத் தலைவர்களின் இத்தகைய காட்டமான விமர்சனங்கள் தவெக - விசிக இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

"திமுக-வை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என்று கூறிவிட்டு, அதே திமுக-வோடு இணைந்து நின்ற எங்களிடம் விஜய் ஆதரவு கோருவதில் என்ன நியாயம் இருக்கிறது?" என விசிக தரப்பு கேள்வி எழுப்புகிறது. 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட விஜய் போராடி வரும் சூழலில், விசிக-வின் இந்தத் திடீர் எதிர்ப்பு தவெக-விற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
