“டெல்லியில் பெண் காவலர்களே இல்லையா?” - பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்துக் காங்கிரஸ் சரமாரி கேள்வி!

 
டெல்லி பிரியங்கா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறைத் தாக்குதலைக் கண்டித்துப் பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் புதுடெல்லியில் பேரணியாகச் சென்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். தடையை மீறிப் பேரணி செல்ல முயன்ற தலைவர்களைத் தடுப்புகளை அமைத்துத் தடுத்த டெல்லி காவல்துறை, அவர்களை வலுக்கட்டாயமாகப் பேருந்துகளில் ஏற்றிச் சென்று கைது செய்தது.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட விதம் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் டெல்லி காவல்துறையைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

போலீசார் தடியடி

"டெல்லி காவல்துறையில் பெண் காவலர்களே இல்லையா? ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை ஆண் காவலர் ஒருவர் வலுக்கட்டாயமாகப் பேருந்தில் தள்ளி ஏற்றுவது எந்த வகையில் நியாயம்?"

அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை ஜனநாயகத்தை மிதித்தது மட்டுமின்றி, பெண்களின் கண்ணியத்திற்கு அளிக்க வேண்டிய மரியாதையையும் மீறியுள்ளதாகக் காங்கிரஸ் சாடியுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இத்தகைய மோசமான நடந்து கொண்டதற்கு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.