“வெட்கமில்லையா மிஸ்டர் மோடி?” - ஸ்டாலின் ஆவேசம்!

 
ஸ்டாலின் ஸ்டாலின்

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கானப் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார். 

ஸ்டாலின் பிரசாரம்

புதுச்சேரி தற்போது 'கலாச்சார வியாபாரிகளின்' கையில் சிக்கிச் சீரழிந்து வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.  "புதுச்சேரி வீதிகளில் இன்று போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு மத்திய அரசும், இங்குள்ள மாநில அரசுமே நேரடிக் காரணம். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது. மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்தியதைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். 

"புதுச்சேரியை இந்த அளவுக்குச் சீரழித்து விட்டு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் ரோடு ஷோ நடத்துகிறீர்கள்? இவ்வளவு நடந்தும் வெட்கமில்லாமல் இங்கே வந்து ஓட்டுக் கேட்கிறீர்களே.. உங்களுக்கு வெட்கமாக இல்லையா மிஸ்டர் மோடி?" என நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் திமுக

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் நேரடித் தலையீட்டால்தான் புதுச்சேரியின் தனித்தன்மை சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதுச்சேரி மக்கள் இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.