“இப்படி செய்ய வெட்கமாயில்லையா?... யூடியூப் வீடியோக்களால் என் வாழ்க்கையே நாசமாயிடுச்சு” - தேவிப்பிரியா ஆவேசம்!
தமிழ்த் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் தனது தனித்துவமான நடிப்பாலும், குரலாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த நடிகை தேவிப்பிரியா, தன்னைப் பற்றிச் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற வதந்திகள் மற்றும் தற்கொலைப் பொய்ச் செய்திகளுக்கு எதிராகத் தனது கடுமையான வேதனையைப் பதிவு செய்துள்ளார். சில யூடியூபர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தன்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை தேவிப்பிரியா, "சில யூடியூபர்கள் தங்களது வியூஸ் மற்றும் பணத்திற்காக அடுத்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்காமல் தவறாகப் பேசி விடுகிறார்கள். அவர்கள் பேசிவிட்டு ஒருநாள் சம்பளத்தை வாங்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள்; ஆனால் அந்த வீடியோ பல வருடங்களாகச் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டே இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் தற்கொலை செய்து இறந்துவிட்டதாக ஒரு வீடியோ வெளியாகிப் பெரிதாகப் பேசப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், "நான் அப்படி அவர்களுக்கு என்னதான் செய்தேன் என்றே தெரியவில்லை; இதற்கு முன்பும் என்னைப் பற்றிப் பல தவறான விஷயங்களைப் பரப்பியிருக்கிறார்கள்" எனக் குமுறியுள்ளார்.
தான் தொடர்களிலும் திரைப்படங்களிலும் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிப்பதாலேயே பலருக்குப் பிடிக்காது என்றும், அப்படி இருக்கும்போது யூடியூபர்கள் ஏதாவது சொன்னால் மக்கள் அதனை உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பிவிடுவதாகவும் தேவிப்பிரியா வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "யூடியூப் வீடியோக்களால் எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது. எங்களைப் பற்றி மோசமாக வீடியோ போடுவதால், ஒரு நல்ல விசேஷத்திற்குக் கூட எங்களை அழைக்க மக்கள் யோசிக்கிறார்கள்; சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார். திரையில் ஒரு கதாபாத்திரமாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் அதே குணத்துடன் இருப்பார்கள் என்று நினைப்பது எவ்வளவு தவறானது என்பதையும் அவர் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
