'கூச்சமே இல்லையா..?' தி.மு.க-வின் பொய் முதலீட்டு மூட்டைகள் கிழிந்து தொங்குகின்றன - TVK Vs DMK மோதல்!

 
TVK Vs DMK விஜய்ஸ்டாலின் TVK Vs DMK விஜய்ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, முக்கிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் சென்றது தொடர்பாக ஆளும் த.வெ.க மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. தி.மு.க ஆட்சியில் நடந்த நிர்வாகத் திறமையின்மையை புதிய த.வெ.க அரசின் மீது திணிக்கப் பார்ப்பதாகப் பனையூர் வட்டாரங்கள் கொதிப்படைந்துள்ளன.

கடந்த மே 10-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்நிலையில், அடுத்த சில நாட்களிலேயே தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய இரண்டு முக்கிய பெரும் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாக தி.மு.க தரப்பில் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ரூ.15,800 கோடி மதிப்பிலான போர் விமானத் திட்டத்தைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர மூன்று ஆண்டுகள் போராடினோம். ஆனால் அந்தத் திட்டம் தற்போது ஆந்திராவிற்குச் சென்றுவிட்டது" என வேதனை தெரிவித்தார். மேலும், இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே உற்பத்தி செய்து வந்த புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ரூ.2,500 கோடி மதிப்பிலான புதிய ஆலையை ஆந்திராவில் அமைக்க உள்ளதாகவும், இதற்கு த.வெ.க-வின் சிறுபான்மை (Minority) ஆட்சியும், புதிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் அலட்சியமுமே காரணம் என தி.மு.க-வினர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

டிஆர்பி ராஜா

தி.மு.க-வினரின் இந்த விமர்சனங்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் த.வெ.க-வின் 'வெர்ச்சுவல் வாரியர்ஸ்' மற்றும் ஐடி விங் தரப்பினர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 3 ஆண்டுகளாக உழைத்ததாகக் கூறுவது முற்றிலும் பொய் என த.வெ.க சாடியுள்ளது. இந்த போர் விமானத் திட்டத்திற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அதனைக் கையகப்படுத்தி டி.ஆர்.டி.ஓ அமைப்பிடம் ஒப்படைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, கடந்த வாரம் ஆந்திராவின் புட்டபர்த்தியில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவே நடைபெற்றுள்ளது.

இந்தத் திட்டம் ஆந்திராவிற்குத்தான் செல்கிறது என்ற செய்தி கடந்த மே 7-ம் தேதியே ஊடகங்களில் வெளியாகிவிட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே இந்த முதலீடு கையை விட்டுப் போனது தெரிந்திருந்தும், தேர்தல் நேரத்தில் விமர்சனம் வரும் என்று மறைத்துவிட்டு, இப்போது த.வெ.க மீது பழிய போடுவது ஏன் என த.வெ.க-வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

முதல்வர் விஜய்

அதேபோல், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஆந்திராவின் தடா  பகுதியில் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய முன்மொழிந்த திட்டத்திற்கு, கடந்த மே 6-ம் தேதியே ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பதற்கு 4 நாட்களுக்கு முன்பே, தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோதே இந்தத் திட்டமும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன் பின்னரே கடந்த மே 18 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நிலைமை இப்படி இருக்க, கொஞ்சமும் கூச்சமில்லாமல் தி.மு.க தனது நிர்வாகத் தோல்விகளை, பிறந்து சில நாட்களே ஆன ஒரு புதிய அரசின் மீது வன்மமாகக் கொட்டுகிறது என த.வெ.க தரப்பு சாடியுள்ளது.

ஆட்சியில் இருந்த போது வெறும் விளம்பரங்களை மட்டுமே செய்து மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைச் சீரழித்த தி.மு.க, தற்போது தனது பாவங்களை மறைக்க நாடகமாடுகிறது என்றும்; உரிய கால அவகாசத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு அனைத்துத் துறைகளிலும் சீரான மற்றும் பிரம்மாண்டமான தொழில் வளர்ச்சியைத் தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரும் எனப் பனையூர் வட்டாரங்கள் முழு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளன.