அண்ணாவின் கனவு தமிழகத்தை உருவாக்குவோம்..!! சரித்திரம் படைப்போம்!!

 
அறிஞர் அண்ணா

இன்று அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற அண்ணா மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1909 செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது  அண்ணாவை அடுத்த தெருவுக்கு தெரியாது.  ஆனால் 1969 பிப்ரவரி 3ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி தமிழ் மக்கள்  பெருந்துயரமாக சோகக்கடலில் மூழ்கினர்.


அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக மட்டும் சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை அன்றைய தினத்தில் 1.5 கோடி . இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இப்படி ஒரு சாமானியப் பிறப்புக்கும், சாதனை மரணத்துக்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கை மிகப்பெரிய திருப்பங்கள் நிறைந்தது மட்டுமல்ல, வரலாற்றின் திருப்புமுனையாகவும் அமைந்தது. 

1909 செப்டம்பர் 15ல் அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் நடராஜன், பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
சமூக நீதி, மாநிலம் , மொழி உரிமை என பன்முகச் சிந்தனையாளர், இதனை அரசியலில் கொண்டு வருவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்தவர். தமிழகத்தில் தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர்.


காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றினால் இந்தியாவிலேயே முதல்வரான 2வது தலைவர். இதுவரை தமிழகத்தை 53 ஆண்டுகள் ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிக்கு அடித்தளம் இட்டவர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டியவர். துடிப்பும், பரபரப்பும், விவாதங்களும் நிரம்பியது அவரது வாழ்க்கை.

மிக, மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அண்ணா தமது தொத்தாவால் வளர்க்கப்பட்டவர். தமிழகத்தின் மிகப் பிரபலமான நாத்திகத் தலைவராக இருந்த அண்ணா சிறுவயதில் பிள்ளையார் பக்தர் என்கிறார் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம்.காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார். இந்தக் கல்லூரிப் பருவமே அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அறிஞர் அண்ணா
அவருடைய ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன்தான் அரசியலின் பக்கம் அண்ணாவை திசை திருப்பியவர். அவருடைய எளிய அறையே அண்ணாவின் குருகுலமாக அமைந்தது. அண்ணாவின் 21 வயதில் அண்ணாவுக்கும் ராணி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது.1931ல் பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராகவும், காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராகவும், சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

இதற்குள், நீதிக்கட்சி செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிய அண்ணா 1935ல் பெரியாரை முதல் முதலாக சந்தித்தார் . 1937ல் தமது 28 வயதில் பெரியாரின் குடியரசு, மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார். அதே ஆண்டில் சுயமரியாதை இயக்கம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தி சிறை சென்றார். ஆரிய மாயை, நீதி தேவன் மயக்கம், கம்பரசம் போன்ற நூல்களை எளிய நடையில் எழுதினார். இந்த கால கட்டத்தில் சிறு சிறு குழப்பங்கள் பெரிதாகி பெரியார் – அண்ணா இடையே விரிசல் அதிகமானது. 1949 செப்டம்பர் 17ல் திமுகவை உருவாக்கினார். 1957 தேர்தலில் 15 தொகுதிகளிலும், 1962ல் 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.


1967ல் அண்ணா ராஜாஜி தலைமையில் கூட்டணி பெரும் வெற்றி பெற்று 1967 மார்ச் 6ல் தமிழகத்தின் முதல்வரானார். சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. இவரது ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கப்பட்டது. அமைச்சர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்தார். முதலிரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார். 1968ல் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அதே ஆண்டு செப்டம்பரில் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார்.

1969 பிப்ரவரி 3ம் தேதி அதிகாலை 12.20க்கு அண்ணா உயிரிழந்தார். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் சென்னையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1.5 கோடி என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழமையான செம்மொழியை அரசியலுக்கு கொடையாக திராவிட கட்சிகளுக்கு அளித்தது அண்ணா தான் என்றால் மிகையில்லை.

அறிஞர் அண்ணா

சாமானிய குடும்பத்தில் பிறந்து சாதனை மரணத்துக்கு சொந்தக்காரரான அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை, வரலாற்றையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழகத்தில் அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலைகள், நூலகம் என ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இருந்த போதிலும் அவர் கனவு கண்ட நவீன தமிழகத்தின் பரிமாணத்தை இன்னும் தமிழகம் அடைய வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. அண்ணாவின் பெயரால் ஆட்சி நடத்துபவர்கள் அறிஞர் அண்ணா கனவு கண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே சாமானியர்களின் விருப்பம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web