ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டுத் தற்கொலை - திருப்பூரில் சோகம்!

 
பெண் போலீஸ்

திருப்பூரில் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த ரஞ்சனி (24) என்ற பெண் போலீஸ், தங்கி இருந்த குடியிருப்பு வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்த ரஞ்சனி, திருப்பூர் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் நல்லூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர், நேற்று வழக்கம்போல் தனது பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை

தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தனது சக பெண் காவலர் ஒருவரிடம் ரஞ்சனி முன்னதாகத் தெரிவித்துள்ளார். இதனால் பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடிவந்த சக காவலர்கள், உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று ரஞ்சனியை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்திருந்தது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரஞ்சனியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.