ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நேரில் பார்த்த சகோதரர் உட்பட இருவரிடம் சிபிஐ தீவிர விசாரணை!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அவரது மனைவி பொற்கொடியைத் தொடர்ந்து, சம்பவத்தை நேரில் பார்த்த அவரது சகோதரர் வீரமணி உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செம்பியன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பலரைக் கைது செய்த போதிலும், கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான சதித்திட்டத்தை வெளிக்கொணர வழக்கைக் சிபிஐக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீதிமன்றத்தை நாடினார்.

நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சிபிஐ புதிய வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று புகைப்படங்கள் மற்றும் தடயங்களைச் சேகரித்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கிய அவர், சில யூடியூபர்கள் இக்கொலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகச் சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக, ஆம்ஸ்ட்ராங் தாக்கப் பட்டபோது அவரைக் காப்பாற்ற முயன்று காயமடைந்த அவரது சகோதரர் வீரமணி மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த கீணோஸ் ஆகிய இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் நேற்றைய தினம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

சாட்சிகளிடம் விசாரணையை நிறைவு செய்துவரும் சிபிஐ அதிகாரிகள், அடுத்தகட்டமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளைக் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இக்கொலையின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் சதித்திட்டங்கள் முழுமையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
