ராணுவ ஜெனரல் டூ முதலமைச்சர்... உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் புவன் சந்திர கந்தூரி காலமானார்... அரசியல் தலைவர் இரங்கல்!

 
உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் புவன் சந்திர கந்தூரி உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் புவன் சந்திர கந்தூரி

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மூத்த தலைவருமான புவன் சந்திர கந்தூரி (91), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டேராடூனில் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அரசியலில் நுழைவதற்கு முன்பாகவே, புவன் சந்திர கந்தூரி இந்திய ராணுவத்தில் 'மேஜர் ஜெனரல்' ஆகப் பணியாற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் ஆவார். ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பா.ஜ.க-வில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

uththarkanth

உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க-வின் மிக முக்கிய முகமாக விளங்கிய இவர், இரண்டு முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். முதன்முறையாக கடந்த 2007 முதல் 2009-ம் ஆண்டு வரையும், அதன் பின்னர் இரண்டாவது முறையாக 2011 முதல் 2012-ம் ஆண்டு வரையும் உத்தரகாண்ட் முதலமைச்சராகச் செயல்பட்டு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். மேலும், மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.

91 வயதான புவன் சந்திர கந்தூரி, கடந்த சில காலமாகவே வயது முதிர்வு மற்றும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 11 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. நேர்மையான மற்றும் ஒழுக்கமான நிர்வாகத்திற்குப் பெயர் பெற்ற ஒரு மூத்த அரசியல் தலைவர் காலமான செய்தி உத்தரகாண்ட் மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.