ஜம்மு-காஷ்மீரில் தற்செயலாகத் துப்பாக்கி குண்டு பாய்ந்து ராணுவ வீரர் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு நகரில் உள்ள அக்னூர் பகுதியில், பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் தற்செயலாகத் துப்பாக்கி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜம்முவின் அக்னூர் எல்லைப் பிரிவில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த சேவைத் துப்பாக்கி எதிர்பாராதவிதமாகத் திடீரென வெடித்துள்ளது. இந்த விபத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவருக்குக் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக வீரர்கள் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பலியான வீரரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அக்னூர் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான சட்ட மற்றும் ராணுவ நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
