ஆரோக்கியா பால், தயிர் விலை மீண்டும் உயர்வு! பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. புதிய விலை என்ன?
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வழக்கமான நுகர்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு லிட்டர் ஆரோக்கியா பால் ரூ.86-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், ஆரோக்கியா தயிர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தயிர் ஏற்கனவே ரூ.88-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பால் மற்றும் தயிர் ஆகியவை தினசரி வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இருப்பதால், விலை உயர்வு பொதுமக்களின் மாதாந்திர செலவில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் இந்த ஆண்டு ஏற்கனவே பல கட்டங்களாக பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளன. கடந்த ஜூலை மாதம் ஆரோக்யா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தியதாக அப்போது செய்திகள் வெளியாகின.

மேலும், தமிழக அரசு செப்டம்பர் 1 முதல் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது. இருப்பினும், ஆவின் பால் சில்லறை விலை மாற்றமின்றி தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.தனியார் பால் நிறுவனங்களின் விலை மாற்றங்கள் காரணமாக, பால் மற்றும் தயிர் வாங்கும் நுகர்வோர் தங்களது செலவுகளை கூடுதலாக கணக்கிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
