இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு பிடிவாரண்ட்.. திரையுலகில் பரபரப்பு!
பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்புக்கு எதிராகக் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

பிராமண சமூகத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் அனுராக் காஷ்யப் தெரிவித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்குப் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் சூரத் நீதிமன்றம் இந்த பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப், தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'லியோ' மற்றும் 'மகாராஜா' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையேயும் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
