வாக்குச்சாவடிகளில் தவெகவினர் அடுத்தடுத்து கைது... தொடரும் அத்துமீறல் நடவடிக்கையால் பரபரப்பு!

 
தவெக தவெக

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மற்ற கட்சியினருடன் மோதலில் ஈடுபட்ட தவெக நகரச் செயலாளர் அஸ்லாம் என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். தேர்தல் நேரத்தில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக விசில்

இதேபோல் நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில், காளிதாஸ் என்ற இளைஞர் தனது தாயாரின் வாக்கை அத்துமீறிச் செலுத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக வாக்களிக்க வேண்டும் என்ற விதியை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டதால் தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் இந்தப் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிரத் திருப்பத்தூரில் தான் வாக்களித்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆக வெளியிட்ட விஜய் ரசிகர் சக்திவேல் என்பவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தவெக விஜய்

வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்லவும், வாக்களிப்பதைப் படம் பிடிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், தவெக ஆதரவாளர்களின் இத்தகைய தொடர் அத்துமீறல்கள் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மற்ற தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழகத்தின் சில பகுதிகளில் தவெக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பதற்றம் நிலவி வருகிறது.