தமிழகத்தில் 404 வேட்பாளர்கள் மீது கொலை, பாலியல் வன்கொடுமை என சீரியஸ் குற்ற வழக்குகள்... அதிரவைக்கும் ஏடிஆர் அறிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி மற்றும் சொத்து விவரங்கள் குறித்த 'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்' (ADR) வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் அணுகுண்டாக வெடித்துள்ளது.
தமிழகத்தில் போட்டியிடும் 4,023 வேட்பாளர்களில் 722 பேர் (18%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 404 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற மிகக் கடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அதிமுக கட்சியில் 60 வேட்பாளர்கள் (முதலிடம்) மீதும் தவெக (TVK)வில் 43 வேட்பாளர்கள் (இரண்டாம் இடம்), திமுகவில் 32 வேட்பாளர்கள் மீதும், பாஜகவில் 9 வேட்பாளர்கள் மீதும், காங்கிரஸ் கட்சியில் 5 வேட்பாளர்கள் மீதும் பாமகவில் 6 வேட்பாளர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. குறிப்பாக 13 பேர் மீது கொலை வழக்கும், 44 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் இருப்பது வாக்காளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 981 பேர் கோடீஸ்வரர்கள். இதில் சொத்து மதிப்பில் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளவர்கள்: லீமாரோஸ் மார்ட்டின் (அதிமுக - லால்குடி): லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியான இவர், சுமார் ரூ. 5,863 கோடி சொத்துக்களுடன் தமிழகத்தின் நம்பர் 1 பணக்கார வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
விஜய் (தவெக தலைவர்): நடிகர் விஜய் தனது பிரமாணப் பத்திரத்தில் ரூ. 648 கோடி சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா (தவெக - வில்லிவாக்கம்): விஜய்யின் கட்சி பொதுச்செயலாளரான இவர் ரூ. 534 கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். (குறிப்பு: இவர் லீமாரோஸ் மார்ட்டினின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது).

கடந்த 2021 தேர்தலில் 13 சதவீதமாக இருந்த குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை, இந்த 2026 தேர்தலில் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. "குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பதைப் போல அரசியல் கட்சிகள் சீட் வழங்கியுள்ளன" என ஏடிஆர் அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
