இன்று மாலை மகாதீபம் கண்டதும் இதைச் செய்ய மறக்காதீர்கள் - கார்த்திகை விரதத்தை நிறைவு செய்வது எப்படி?!

 
திருவண்ணாமலை மகாதீபம் கார்த்திகை

சிவபெருமானும் முருகப் பெருமானும் அருள் பாலிக்கும் புனிதமான கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணையும் நாளில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பிரம்மனுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே எழுந்த ஆணவத்தை அடக்கச் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றி, யாராலும் அணுக முடியாத மலை வடிவமாகத் திருவண்ணாமலையில் அமர்ந்த திருநாளைக் குறிக்கும் வகையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாலையில் மகாதீபம் தரிசனம் கண்டதும் பின்பற்ற வேண்டிய வழிபாட்டு நெறிமுறைகளும், விரதத்தை நிறைவு செய்யும் முறையும் தெரிஞ்சுக்கோங்க. 

கார்த்திகை விரதம் இருக்க விரும்புவோர், முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று இரவே விரதத்தைத் தொடங்கி விட வேண்டும். பரணி தீபத்தன்று பூஜை அறையில் ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தீபம்

திருக்கார்த்திகை நாளன்று அதிகாலையில் எழுந்து தலைக்குக் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்க வேண்டும். பகல் முழுவதும் இயன்றவர்கள் உபவாசமாகவும், உடல்நிலை அல்லது சூழல் காரணமாக முடியாதவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டுமே எடுத்துக் கொண்டும் விரதம் இருக்கலாம்.

மாலையில் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ஆண்டிற்கு ஒருமுறை அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தருவார். அந்தத் தரிசனம் கிடைத்த அடுத்த நொடியிலேயே மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபத்தைக் கண்டதும் “அண்ணாமலையாருக்கு அரோகரா” எனப் பக்தியுடன் வேண்டிக் கொண்ட பின்னரே வீட்டில் தீபம் ஏற்றத் தொடங்க வேண்டும்.

முதலில் வீட்டின் வாசலிலும், அதனைத் தொடர்ந்து பூஜை அறையிலும் விளக்கேற்ற வேண்டும். பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் தீபங்களுடன் கூடுதலாக இரண்டு தீபங்கள் ஏற்றலாம். பிறகு சமையல் அறை, ஹால், படுக்கை அறை, பால்கனி, வீட்டின் பின்புறம் எனப் பல்வேறு இடங்களில் தலா இரண்டு விளக்குகள் வீதம், வீடு முழுவதும் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். இவற்றில் குறைந்தது ஒரு தீபமாவது நெய் தீபமாக இருப்பது அவசியம். சிறிய வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், இடவசதிக்கு ஏற்பக் கூடத்திலும் மற்ற பகுதிகளிலும் விளக்குகளை ஏற்றி வழிபடலாம்.

திருவண்ணாமலை மகாதீபம் கார்த்திகை

கார்த்திகை தீப நாளன்று பிரதோஷமும் இணைந்து வருவதால், மாலையில் திருவாசகம், சிவபுராணம், சிவ அஷ்டகம் ஆகியவற்றையும், முருகப் பெருமானுக்குரிய திருப்புகழ், கந்தர் அலங்காரம் ஆகியவற்றையும் பாராயணம் செய்வது கூடுதல் சிறப்பு. சிவபெருமானுக்குக் கார்த்திகை பொரி, அப்பம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

மகாதீபம் கண்டு வீட்டில் தீபங்கள் ஏற்றி, பூஜைகளை நிறைவு செய்த பின்னர் மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்யலாம். திருக்கார்த்திகை நாளன்று ஒருவருக்காவது அன்னதானம் செய்வது கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கையாக உள்ளது.