இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி! அசுதோஷ் தீக்சித் நியமனம் - அக்.31ல் பொறுப்பேற்பு
இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது விமானப்படையின் துணை தளபதியாக பணியாற்றி வரும் அவர், வரும் அக்டோபர் 31-ந்தேதி பிற்பகல் ஏர் சீஃப் மார்ஷல் பதவியில் பொறுப்பேற்க உள்ளார்.
இந்திய அரசின் நியமன அறிவிப்பின்படி, அசுதோஷ் தீக்சித் இந்திய விமானப்படையின் 29-வது தலைமை தளபதியாக பதவியேற்கிறார். தற்போதைய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் அக்டோபர் 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்ததாக அசுதோஷ் தீக்சித் பொறுப்பேற்க உள்ளார்.
1966-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி பிறந்த அசுதோஷ் தீக்சித், 1986-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் இணைந்தார். சுமார் 40 ஆண்டுகள் நீடித்த தனது பணிக்காலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.மத்திய விமானப்படை கட்டளையின் தலைமை அதிகாரி, துணை விமானப்படை தளபதி மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தலைமை அதிகாரி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்திய விமானப்படையின் துணை தளபதியாக பொறுப்பேற்றார்.
அசுதோஷ் தீக்சித் ஒரு Experimental Test Pilot மற்றும் Qualified Flying Instructor ஆவார். பல்வேறு விமானங்களில் 3,500 மணி நேரத்துக்கும் அதிகமான பறக்கும் அனுபவம் அவருக்கு இருப்பதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.மேலும், ஆபரேஷன் சஃபேத் சாகர், ஆபரேஷன் ரக்ஷக், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். அவரது சேவையைப் பாராட்டி பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், வாயு சேனா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.அக்டோபர் 31-ந்தேதி அசுதோஷ் தீக்சித் பொறுப்பேற்றதும், இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்குவார். அவரது பதவிக்காலம் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
