ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கமும், ருத்ராங்க்ஷ் பாட்டில் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் திங்கள்கிழமை ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் மற்றும் ருத்ராங்க்ஷ் பாட்டில் பதக்கத்திற்கான போட்டியில் தொடர்ந்து நீடித்தனர்.
இறுதியில் சீனாவின் ஷெங் லிஹாவோ 254.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் ஆசிய விளையாட்டு போட்டி சாதனையையும் படைத்தார். ஹிமான்ஷு தில்லான் 252.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ருத்ராங்க்ஷ் பாட்டில் 230.9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆரம்ப கட்டத்தில் ருத்ராங்க்ஷ் சிறப்பாக செயல்பட்டு முன்னிலையில் இருந்தார். முதல் 10 ஷாட்களுக்குப் பிறகு அவர் 106.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். ஹிமான்ஷு 104.8 புள்ளிகளுடன் அவரைத் தொடர்ந்து இருந்தார். தொடர்ந்து நடைபெற்ற எலிமினேஷன் சுற்றுகளில் ஹிமான்ஷு தனது ஆட்டத்தை மேம்படுத்தி வெள்ளிப் பதக்கத்துக்கான இடத்தைப் பிடித்தார்.
இதற்கு முன்பாக நடைபெற்ற ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவிலும் ஹிமான்ஷு தில்லான், ருத்ராங்க்ஷ் பாட்டில் மற்றும் 18 வயதான பார்த்த் மானே ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருந்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி 1890.1 புள்ளிகள் பெற்றது. சீனா 1899.0 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஹிமான்ஷுவுக்கு இது அறிமுக ஆசிய விளையாட்டு போட்டியாகும். ஒரே நாளில் அணிப் பிரிவில் வெள்ளி மற்றும் தனிநபர் பிரிவில் வெள்ளி என அவர் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியின் அடுத்தடுத்த போட்டிகளிலும் இந்திய வீரர்களிடம் இருந்து மேலும் பதக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
