2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: ஒரே நாளில் பதவிகளைக் குவித்து டாப் 10 பட்டியலில் நுழைந்த இந்தியா!
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8வது நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரே நாளில் பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்க எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதுடன், பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது.
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின் எட்டாவது நாளில் இந்தியா கபடிப் பிரிவில் மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணி 37-34 என்ற புள்ளி கணக்கில் பலம் வாய்ந்த ஈரானை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான கபடி இறுதிப் போட்டியிலும் இந்திய அணி 40-34 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி, ஆசிய விளையாட்டு வரலாற்றில் தங்களது 9-வது தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.

ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சவான் பார்வால் 42.195 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 2 மணி நேரம், 11 நிமிடங்கள் மற்றும் 37 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். இப்போட்டியில் ஜப்பானின் இசிதகா யமஷிதா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் பிராச்சி சௌத்ரி 53.21 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணி பிரிவில் திலோத்தமா சென், விதர்சா வினோத் மற்றும் ஆஷி சௌக்சி ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1763 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இதற்கிடையே, ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஏற்கனவே இரண்டு முறை ஆசிய விளையாட்டுத் தங்கங்களை வென்ற தஜிந்தர்பால் சிங் தூர், இம்முறை குண்டை 20.64 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று தொடர்ச்சியான தனது முத்திரையைப் பதித்தார்.

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் இணை கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஹாங்காங் அணியிடம் வீழ்ந்து வெண்கலப் பதக்கத்துடன் தனது பயண நிறைவு செய்தது.
இந்தியா இதுவரை 4 தங்கம், 12 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளது. இதனிடையே, தொடர் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா 107 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் அபய் சிங், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்
