ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்! ஷாட்புட்டில் தஜிந்தர்பால் சிங் டூர் வெள்ளி

 
குண்டு எறிதல்

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான ஷாட்புட் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில் ஆண்களுக்கான ஷாட்புட் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் டூர் பங்கேற்றார். போட்டியின் 5-வது முயற்சியில் அவர் 20.64 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஈரானின் முகமது ரெசா தாய்பிசே 20.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். அவரது இந்த முயற்சி ஆசிய விளையாட்டுப் போட்டியின் புதிய சாதனையாகவும் அமைந்தது. சவுதி அரேபியாவின் முகமது டோலு 20.48 மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

Tajinderpal's search for third gold ends in silver, bronze for Prachi

தஜிந்தர்பால் சிங் டூர் ஏற்கனவே 2018 ஜகார்த்தா மற்றும் 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஷாட்புட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தடகளப் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு பதக்கம் சேர்ந்துள்ளது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகிறது.