ஒரே பிரசவத்தில் 3 குட்டிகளைப் பெற்றெடுத்த ஆசியப் பெண் சிங்கம் 'மகாகௌரி' - வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

 
சிங்கம் குட்டி பிரசவம்

டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆசியப் பெண் சிங்கம் ஒன்று, ஒரே பிரசவத்தில் 3 குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது. இதன் மூலம் பூங்காவின் பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டத்தில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

பூங்காவில் உள்ள ஆசியச் சிங்க ஜோடிகளான ‘மகாகௌரி’ (பெண் சிங்கம்) மற்றும் ‘மகேஷ்வர்’ (ஆண் சிங்கம்) ஆகியவற்றுக்குக் இந்த 3 குட்டிகளும் பிறந்துள்ளன. இந்தச் சிங்க ஜோடிக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு (ஏப்ரல் 2025) ஐந்து குட்டிகள் பிறந்தன. அவற்றில் 'கார்த்திக்' மற்றும் 'கர்ணி' ஆகிய இரண்டு குட்டிகள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருகின்றன. பிரசவித்த வெறும் 15 மாதங்களுக்குள் பெண் சிங்கம் மகாகௌரி மீண்டும் வெற்றிகரமாகக் கருத்தரித்துக் குட்டிகளை ஈன்றிருப்பது பூங்காவின் வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் அரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

புதிதாகப் பிறந்துள்ள 3 குட்டிகளும், தாய் மகாகௌரியும் பூங்காவின் பிரத்யேகப் பிரசவக் கூண்டில் தனியாக வைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். குட்டிகளின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு எவ்வித இடையூறும் இல்லாத அமைதியான சூழல் தேவை என்பதால், பூங்கா மருத்துவக் குழுவினர் மற்றும் விலங்குப் பராமரிப்பாளர்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் அவற்றின் உடல்நலத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த 3 புதிய குட்டிகளின் வரவால் பூங்காவில் உள்ள ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது இந்த பூங்காவில் சுந்தரம், மகேஷ்வர், கார்த்திக் ஆகிய 3 ஆண் சிங்கங்களும்; மகாகௌரி, சைலஜா, கர்ணி ஆகிய 3 பெண் சிங்கங்களும் என மொத்தம் 6 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அழிந்து வரும் ஆபத்தில் இருக்கும் ஆசியச் சிங்க  இனத்தைப் பெருக்குவதற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சிகளின் தொடர் வெற்றி, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பூங்கா ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.