ஆசிய நீச்சல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தந்தை - மகள் சாதனை... 10 பதக்கங்களைக் குவித்து உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி!

 
தந்தை

ஆசிய மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தந்தையும், மகளும் இணைந்து 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் இருவரும் அடுத்த ஆண்டு ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2-வது ஆசிய மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் இணைச் செயலாளருமான டி. சந்திரசேகரன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா பங்கேற்றனர்.

65 முதல் 69 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட சந்திரசேகரன், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் நீச்சல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும், 50 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இதன் மூலம் அவர் 3 பதக்கங்களைக் கைப்பற்றினார்.

அவரது மகளான ஐஸ்வர்யா, 30 முதல் 34 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றார். 50 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அவர், 50 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.

மேலும், 4x50 மீட்டர் மெட்லே ரிலே போட்டியில் வெள்ளிப் பதக்கமும், கலப்பு பிரீஸ்டைல் ரிலே மற்றும் பெண்கள் பிரீஸ்டைல் ரிலே போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களும் வென்றார்.

இவ்வாறு தந்தை சந்திரசேகரன் 3 பதக்கங்களையும், மகள் ஐஸ்வர்யா 7 பதக்கங்களையும் வென்று மொத்தம் 10 பதக்கங்களைத் தமிழகத்துக்குப் பெற்றுத் தந்துள்ளனர். இருவரும் 2027 ஜூலை மாதம் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.