ஆசிய இளையோர் குத்துச்சண்டை... இந்திய வீராங்கனைகள் 27 பதக்கங்களை வென்று சாதனை!
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திப் பதக்கங்களை அறுவடை செய்துள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா மொத்தம் 9 தங்கம், 6 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. குறிப்பாகப் பெண்கள் பிரிவில் மட்டும் 7 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 14 பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பெண்கள் பிரிவில் 37 கிலோ எடைப்பிரிவில் அன்ஜீ, 40 கிலோவில் சோனியா, 43 கிலோவில் தன்வி மற்றும் 46 கிலோவில் ஹன்சிகா அட்ரி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் சுனைனா, பூமிகா மற்றும் ஏஞ்சல் ஆகியோரும் தத்தமது பிரிவுகளில் தங்கம் வென்று இந்திய வீராங்கனைகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆண்கள் பிரிவில் யாஷ் குமார் மற்றும் முகமது யாசீர் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்தனர்.
சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், இந்திய இளையோர் அணியினர் வெளிப்படுத்திய இந்தத் திறமை அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியா பெற்றுள்ள இந்தப் பெரிய வெற்றி, வருங்காலத்தில் குத்துச்சண்டைத் துறையில் இந்தியா ஒரு வல்லரசாகத் திகழும் என்பதைக் காட்டுகிறது.
