ஆசியாவின் பெரிய தேர்... திருவாரூர் ஆழித்தேரோட்டம் துவங்கியது... 2,000 போலீசார் குவிப்பு.. விண்ணதிரும் கோஷம்!
ஆசியாவின் மிகப் பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேரோட்டம் துவங்கியது. திருவாரூரில் ஆழிதேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முதலே பல மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் குவிந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணத்திற்காக 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.50 மணிக்கு திருவாரூர் ஆழித்தேரோட்டம் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆடி அசைந்து வருவதைக் காண கண்கொள்ளாக் காட்சி. 30 அடி உயரம், 30 அடி அகலத்தில் 300 டன் எடையுடன் பவனி வரும் ஆழித்தேரோட்டத்தில் உள்ளூர் மக்களும் கலந்து கொள்ள வசதியாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழித்தேரில் தியாகராஜசுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்றிரவு அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேரில் இருந்தவாறே தியாகராஜருக்கு இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று காலையும் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து காலை 8.50 மணிக்கு ஆழித்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ஆழித்தேருக்கு முன் விநாயகர், சுப்ரமணியர் தேர்கள் காலை 5 மணிக்கு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆழித்தேர் இதற்கு பின் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட உள்ளன.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்துள்ளன. விழாவை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக திருவாரூரில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேரோட்டத்தின்போது கூட்டத்தை கண்காணிக்க தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி, கீழ வீதி ஆகிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!