ஆசியாவின் மிகப்பெரிய தேர்... நாளை திருவாரூர் ஆழித்தேரோட்டம்.. வடம் பிடிக்கத் தயாராகும் பக்தர்கள்!
"திருவாரூர் தேரழகு" என்ற முதுமொழிக்கு ஏற்ப, உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இந்தத் தேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
நாளை காலை 5:15 மணிக்கு விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டுத் தேரோட்டம் தொடங்குகிறது. காலை 9:05 மணிக்கு பிரம்மாண்டமான ஆழித்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வீதி உலா வரும். இன்று இரவு (சனிக்கிழமை) தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டுத் தேரில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.

ஆழித்தேரின் பிரம்மாண்ட சிறப்பம்சங்கள்:
அலங்கரிக்கப்படாத நிலையில் தேரின் எடை 220 டன். இதன் உயரம் மற்றும் அகலம் தலா 30 அடியாகும். அலங்கரிக்கப்பட்ட பின் இதன் பிரம்மாண்டம் பல மடங்கு அதிகரிக்கும். திருச்சி பெல் நிறுவனம் சார்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரும்பு அச்சுகள் மற்றும் 4 இரும்புச் சக்கரங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. தேரை எளிதாகக் கையாள ஹைட்ராலிக் பிரேக் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஆழி என்றால் கடல் போன்ற பெரியது என்று பொருள். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பாதுகாப்பு மற்றும் வசதிகள்:
தேரோட்டத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து திருவாரூருக்குச் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 வீதிகளிலும் மருத்துவ முகாம்கள் மற்றும் குடிநீர் வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
