ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேரோட்டம்.. மார்ச் 29-ல் கோலாகலம் - திருவாரூரில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்!

 
திருவாரூர் தேர் குதிரை யாழி ஆழித்தேரோட்டம் கைவினைக் கலைஞர் திருவாரூர் தேர் குதிரை யாழி ஆழித்தேரோட்டம் கைவினைக் கலைஞர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் வரும் மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆழித்தேரின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான யாளி சிலைகள் மற்றும் தேரை இழுத்துச் செல்வது போன்ற தோற்றத்தில் உள்ள மரத்தாலான குதிரை சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவாரூர்

பழமை மாறாமல் இருப்பதற்காகத் தேர் முழுவதும் பல்வேறு வண்ணக் கலவைகளைக் கொண்டு மெருகூட்டப்பட்டு வருகிறது. தேரின் கலைநயம் மிக்க மரச்சிற்பங்களுக்கும் மெருகு ஏற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

அலங்கரிக்கப்பட்ட பிறகு இந்த ஆழித்தேர் 96 அடி உயரமும், சுமார் 350 டன் எடையும் கொண்டதாக இருக்கும். தேரைச் சுற்றி அலங்காரத் துணிகள், மூங்கில் தட்டிகள் மற்றும் வண்ணத் தோரணங்கள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. தேரின் உச்சியில் வைக்கப்படும் 6 அடி உயரக் கலசம் தேரோட்டத்திற்கு முன்னதாகப் பொருத்தப்படும்.

திருவாரூர்

மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை பூஜைகள் முடிந்து, காலை சுமார் 5:30 முதல் 6:30 மணிக்குள் வடம் பிடித்தல் நிகழ்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் இந்த பிரம்மாண்ட தேர் வலம் வந்து, மீண்டும் நிலைக்கே வந்து சேரும்.

தேரை இழுப்பதற்காக தலா 500 மீட்டர் நீளம் கொண்ட 4 பிரம்மாண்ட வடக்கயிறுகள் தயார் நிலையில் உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.