அசாம் வெள்ள பாதிப்பு... மே.வங்க அரசு ரூ.10 கோடி நிவாரணத்தொகை அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு நிவாரண உதவியாக ரூ.10 கோடி வழங்க மேற்கு வங்காள அரசு தீர்மானித்துள்ளது.
அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அசாமில் நிலவும் இந்த மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்காள முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளச் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, "அண்டை மாநிலமான அசாமில் வெள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அசாம் மக்களுக்கு உதவும் வகையில் மேற்கு வங்க அரசு சார்பில் ரூ. 10 கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர், சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்காள அரசும் அசாம் மாநிலத்திற்குத் தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது.
