இளம்பெண்களின் ஆடைகளைக் களைந்து சித்ரவதை... பதற வைக்கும் வீடியோ... அசாம் நைட் கிளப்பில் கொடூரம்!

 
இளம்பெண்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நைட் கிளப்பில் இளம்பெண்ணின் ஆடைகளை களைந்து கடுமையாகத் தாக்கியதாக எழுந்த புகாரில், 3 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கவுகாத்தியின் கானாபாரா பகுதியில் மதுபான பார் வசதியுடன் கூடிய உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலை நேரத்தில் இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவிய காணொளியில், அந்தப் பெண்ணை தலைமுடி மற்றும் ஆடைகளைப் பிடித்து இழுத்துச் செல்வதும், கீழ்தளத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக திஸ்பூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 3 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கிளப்பின் நிர்வாகத்துடன் தொடர்புடைய சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் கொலை முயற்சி, பெண்ணின் கண்ணியத்தைப் பாதிக்கும் நோக்கில் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் எதனால் ஏற்பட்டது, அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கவலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், விசாரணையின் முடிவில் கூடுதல் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.