திருமணத்திற்கு இன்னும் 2 மாதங்கள் தான்... அசாம் ரைஃபிள்ஸ் வீரர் தேஜா வீரமரணம்!

 
அஸ்ஸாம்

 

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த அசாம் ரைஃபிள்ஸ் வீரர் ஒருவர் நாகாலாந்தில் பணியின்போது துப்பாக்கிக் குண்டு காயமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி. தேஜா. 30 வயதான இவர் அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஆயுதப் படையில் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நாகாலாந்தில் பணியில் இருந்தபோது தேஜாவுக்கு துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தேஜாவின் மரணம் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்காக அவர் 50 நாட்கள் விடுமுறையும் பெற்றிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு திரும்பி, குடும்பத்தினருடன் திருமண ஏற்பாடுகளில் பங்கேற்க அவர் திட்டமிட்டிருந்தார்.மேலும், அக்டோபர் 7-ம் தேதி தேஜாவுக்கு 31-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளையும் திருமணத்தையும் எதிர்பார்த்து குடும்பத்தினர் காத்திருந்த நிலையில், தற்போது அவரது இறுதிப் பயணத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேஜாவின் உடல் நாகாலாந்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் வழியாக விசாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், அங்கிருந்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் ராயகடாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேஜா ஏற்கெனவே உறுப்பு தானம் செய்வதற்கான உறுதிமொழியை அளித்திருந்ததாகவும், அவரது விருப்பத்தின்படி அவர் உயிரிழந்த பிறகு உறுப்புகள் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகவும் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவு செய்தி ராயகடா பகுதியில் பரவியதை தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் அவரது இறுதி அஞ்சலிக்காக திரண்டுள்ளனர்.