ஈரான் உச்ச தலைவர் காமெனி படுகொலை? 30 ஏவுகணைகளால் தரைமட்டமான வளாகம்.. மகள், மருமகனும் உயிரிழப்பு!

 
காமெனி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவர் அலி காமெனியின் இல்லம் மற்றும் அலுவலகங்களை இலக்காகக் கொண்டு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து 'Operation Lion's Roar' என்ற பெயரில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

ஏர்பஸ் செயற்கைக்கோள் படங்களின்படி, காமெனியின் பாதுகாக்கப்பட்ட வளாகத்தின் மீது சுமார் 30 துல்லியமான ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் பல முக்கியக் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இந்தத் தாக்குதலில் காமெனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் உயிரிழந்து விட்டதை ஈரானின் அரசு ஊடகங்களே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. இது ஈரானியத் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

காமெனி

ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காமெனியின் தற்போதைய நிலை குறித்துப் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் உலவுகின்றன:

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "காமெனி உயிருடன் இல்லை என்பதற்கான அறிகுறிகள் வலுவாக உள்ளன" எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "வரலாற்றின் கொடூரமானவர்களில் ஒருவரான காமெனி கொல்லப்பட்டுவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான தருணம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

போர்

ஆரம்பத்தில் காமெனி பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சகம், டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் அறிவிப்புகளுக்குப் பிறகு இதுவரை எந்தவொரு நேரடி விளக்கமோ அல்லது காமெனி பேசும் வீடியோவோ வெளியிடவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு இறையாண்மை மீதான அத்துமீறல் என்று கூறியுள்ளதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டத்தைக் கூட்டவும் வலியுறுத்தியுள்ளன.

ஈரானின் தலைமைப்பீடம் தற்போது ஒரு மிகப்பெரிய 'செயலற்ற நிலையை' எதிர்கொண்டுள்ளது. காமெனி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அது மத்திய கிழக்கின் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.