தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் 17-ல் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 17-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் தொடர்பாக அறிவதற்காககடந்த பிப்.26-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்தார். அப்போது, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப உதவிப் பணியாளர்களுக்கும் ஆணைய செயலிகளை இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது. துணை ராணுவப் படையினரும் படிப்படியாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் தேர்தல் தேதி, மார்ச் 17-ம்தேதி மாலை 3 மணிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்களுக்கு தபால் வாக்கு, மின்னணு பரிமாற்ற தபால் வாக்குகளை கையாள்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
