பெண் சக்தி: 17-வது தமிழக சட்டசபைக்குள் நுழையும் 22 பெண் எம்.எல்.ஏ-க்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 17-வது சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் உறுப்பினர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் மொத்தம் 22 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளனர். இதில் அதிகபட்சமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து 12 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக-வில் இருந்து 6 பெண் உறுப்பினர்களும், தேமுதிக, பாமக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு பெண் உறுப்பினரும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (விருத்தாசலம்) மற்றும் பாமக-வின் சௌமியா அன்புமணி (தர்மபுரி) ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திற்குள் முதன்முறையாக நுழைய உள்ளனர்.
தவெக-வில் இருந்து எம்.ஆர்.பல்லவி, காமாட்சி, சிந்து, விஜயலட்சுமி உள்ளிட்ட 12 பேர் வெற்றி பெற்றுப் பெண் பிரதிநிதித்துவத்தில் அக்கட்சியை முன்னிலையில் வைத்துள்ளனர். தமிழகத்தில் 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய சட்டசபையில் 22 பெண் உறுப்பினர்களின் குரல் ஒலிக்க உள்ளது ஒரு ஆரோக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.அவர்களின் விவரங்கள்
1.எம்.ஆர்.பல்லவி (த.வெ.க., திரு.வி.க.நகர்), 2.காமாட்சி (த.வெ.க., பல்லாவரம்), 3.மரகதம் குமரவேல் (அ.தி.மு.க., மதுராந்தகம்), 4.சிந்து (த.வெ.க., குடியாத்தம்), 5.எல்.ஜெயசுதா (அ.தி.மு.க., ஆரணி), 6.பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க., விருத்தாசலம்), 7.உஷாராணி (அ.தி.மு.க., ஏற்காடு), 8.சவுமியா அன்புமணி (பா.ம.க., தர்மபுரி), 9.மரகதம் வெற்றிவேல் (அ.தி.மு.க., பாப்பிரெட்டிப்பட்டி), 10.விஜயலட்சுமி (த.வெ.க., குமாரபாளையம்). 11.தமிழ்செல்வி (த.வெ.க., பவானிசாகர்), 12.சத்தியபாமா (த.வெ.க., திருப்பூர் வடக்கு), 13.கமலி (த.வெ.க., அவினாசி), 14.சத்தியபாமா (அ.தி.மு.க., தாராபுரம்), 15.கனிமொழி சந்தோஷ் (த.வெ.க., கவுண்டம்பாளையம்), 16.லீமாரோஸ் (அ.தி.மு.க., லால்குடி), 17.சத்யா (த.வெ.க., கிருஷ்ணராயபுரம்), 18.லதா (மா.கம்யூ, கீழ்வேளூர்), 19.குழந்தை ராணி நாச்சியார் (த.வெ.க., சிவகங்கை), 20.கீர்த்தனா (த.வெ.க., சிவகாசி), 21.ஜெகதீஸ்வரி (த.வெ.க., ராஜபாளையம்), 22.தாரகை கத்பர்ட் (காங்கிரஸ், குளச்சல்).
பெண் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த தவெக-வின் இந்த அணுகுமுறைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
