நாளை கூடுகிறது 17வது சட்டப்பேரவை... தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமனம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று முறைப்படி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெகவின் பலம் 120-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், 17-வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை 9:30 மணிக்குக் கூடுவதால், புதிய எம்எல்ஏக்களைப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராகச் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், விதிமுறைகளின்படி ஒரு எம்எல்ஏ பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். நாளை கூடவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் அனைத்துப் புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிப் பிரமாணத்தை எடுத்துக்கொள்ள உள்ளனர். தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ள தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் என்பதால், புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் முழுவதும் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாளை எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்தவுடன், நாளை மறுதினம் தமிழக சட்டமன்றத்திற்கான புதிய சபாநாயகர் முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதன் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு தனது பெரும்பான்மையை அவையில் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து முதன்முறையாக அரியணை ஏறியுள்ள தவெக, தனது முதல் சட்டசபைக் கூட்டத்தொடரை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளது.
