தமிழகச் சட்டமன்றத்தில் உருவான புதிய வரலாறு... அருகருகே அமரும் திமுக - அதிமுக உறுப்பினர்கள் !
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 9:30 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய காட்சி அரங்கேறியுள்ளது. கடந்த 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சியைக் கைப்பற்றியது முதலும், பின்னர் 1977-இல் அதிமுக உருவானது முதலும், தமிழகத்தில் இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. ஆனால், பல தசாப்தங்களுக்குப் பிறகு முதல்முறையாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அருகருகே அமர்ந்துள்ளனர்.

தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தங்களது கோட்டையாகக் கருதி வந்த திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக, தற்போது புதிய அரசியல் சக்திகள் உதயமாகியுள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கட்சி ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் மட்டுமே சட்டமன்றத்தில் செயல்பட்டு வந்தன. தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் புதிய அரசியல் சூழலால், பரம எதிரிகளாகக் கருதப்பட்ட திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் ஒரே வரிசையில் அமர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம், தமிழக அரசியலில் ஒரு புதிய யதார்த்தத்தை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காலங்காலமாக நிலவி வந்த இருமுனை அரசியல் தற்போது மும்முனை அல்லது பலமுனைப் போட்டியாக மாறியுள்ளதை இந்த இருக்கை அமைப்புகள் பறைசாற்றுகின்றன. இன்று தொடங்கியுள்ள இந்த முதல் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமையப்போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிற
