ரூ.1,023 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்... கோவா இரும்புத்தாது சுரங்க மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி!

 
சுரங்கம் மோசடி

கோவா மாநிலத்தில் நடைபெற்ற இமாலய சட்டவிரோத இரும்புத்தாது சுரங்க மோசடி மற்றும் பணப் பரிமாற்ற ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னணி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சுமார் 1,023 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் பங்குகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

கோவா மாநிலத்தைச் சேர்ந்த 'சல்கோவாகார் குரூப்ஸ் அண்ட் அசோசியேட்ஸ்' என்ற சுரங்க நிறுவனம், எவ்வித முறையான அனுமதியுமின்றி சட்டவிரோதமாகப் பெருமளவில் இரும்புத்தாதுகளை வெட்டி எடுத்துப் பிரித்தெடுத்துள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்தியாவின் இயற்கை வளங்களை, அந்நிறுவனம் சர்வதேசச் சந்தையில், குறிப்பாகச் சீனாவிற்கு அசுர விலைக்கு ரகசியமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளது.

இந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரப் புலனாய்வை மேற்கொண்டது. இந்த சர்வதேசச் சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவி இருந்த சொத்துகளை அமலாக்கத்துறை தற்பொழுது முழுமையாக முடக்கியுள்ளது.

சுரங்கம் மோசடி அமலாக்கத்துறை

சல்கோவாகார் குழுமத்திற்குச் சொந்தமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 99 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.459 கோடி ஆகும். வெளிநாட்டுப் பணப் பரிமாற்ற முறைகேட்டின் மூலம் சிங்கப்பூரில் வாங்கப்பட்டிருந்த 31 சொகுசு அசையா சொத்துகள் சர்வதேசச் சட்டங்களின்படி முடக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.471 கோடி ஆகும். இதுதவிர, பல்வேறு இந்திய நிறுவனங்களில் இந்த சல்கோவாகார் குழுமம் முதலீடு செய்திருந்த ரூ.93 கோடி மதிப்புள்ள சமபங்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

சுரங்க அதிபர்கள் மற்றும் சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்குத் தொடர்பிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த விவகாரத்தில், முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.1,023 கோடியைத் தாண்டுகிறது. இந்திய இயற்கை வளங்களைச் சட்டவிரோதமாகச் சுரண்டி வெளிநாடுகளுக்குக் கடத்திய இந்த அசுர ஊழல் வழக்கில், சல்கோவாகார் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள் மற்றும் கூட்டாளிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தகட்டமாகக் கைது நடவடிக்கைகளை நோக்கிய தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.