ரூ.20 கோடிக்கு சொத்துக்கள்... கட்டுக்கட்டாக பணம்.. லஞ்ச பணத்தில் பெண் தாசில்தார் சொகுசு வாழ்க்கை... தங்கம், வைர நகைகள் பறிமுதல்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வருமானத்திற்கு அதிகமாகக் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த புகாரில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் தாசில்தார் தும்மகோமா சுசரிதாவின் வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 20 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் ஷாமிர்பேட்டை பகுதியில் தாசில்தாராகவும், கூடுதல் பொறுப்பாக இணைப் பத்திரப் பதிவாளராகவும் பணியாற்றி வந்தவர் தும்மகோமா சுசரிதா. கடந்த மாதம், 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தை, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டு நிலமாக மாற்றித் தருவதற்காக நில உரிமையாளரிடம் சுசரிதா 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதில் முதற்கட்டமாக ரூ. 2 லட்சம் முன்பணத்தைப் பெற்றபோது, அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரைப் பணத்துடன் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் அரசுப் பணியில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கைதான சுசரிதா ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாகப் புதிய புகார்கள் எழுந்தன. இதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சுசரிதா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் வீடுகள், பண்ணை வீடுகள், தோட்டங்கள் எனப் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் இறங்கினர்.

இந்தச் சோதனையில் சிக்கிய சொத்துக்களின் விபரம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஐதராபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் ரூ. 5.05 கோடி அரசு வழிகாட்டி மதிப்பு கொண்ட 3 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 2 பிரம்மாண்ட வீட்டு மனைகள், சித்திபேட்டை மாவட்டத்தில் 2.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட விலைமதிப்பற்ற விவசாய நிலங்கள், ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் அரிய வைர நகைகள், ரூ. 12 லட்சம் ரொக்கப் பணம், வங்கிகளில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த ரூ.38 லட்சம், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 அதிநவீன சொகுசு கார்கள் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். கையகப்படுத்தப்பட்ட இந்த ஆவணங்களின் தற்போதைய வெளிச்சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
சுசரிதா தனக்குக் கிடைத்த லஞ்சப் பணத்தை ஐதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களில் முதலீடு செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது லாக்கர் சாவிகள் மற்றும் வங்கிப் கணக்குகளை முடக்கியுள்ள அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை முழுமையாக மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு பெண் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி ரூ. 20 கோடி சொத்து சேர்த்துள்ள இந்தச் சம்பவம் தெலுங்கானா அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
