ஜோதிடர் நியமனம் வாபஸ்! சட்டமன்றத்தில் கிளம்பிய எதிர்ப்பு - முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை!

 
ஜோதிடர் நியமனம் வாபஸ் ஜோதிடர் நியமனம் வாபஸ்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் சிறப்புப் பணி அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவு, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து இன்று அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சரின் இந்த நியமனம் குறித்து விசிக, திமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஜய்

ஒரு மாநில முதலமைச்சரின் ஆலோசகராக அல்லது அதிகாரியாக ஒரு ஜோதிடரை நியமிப்பது நிர்வாக ரீதியாகச் சரியல்ல என்றும், இது அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் வாதிட்டன. முன்னதாக இதே விவகாரம் குறித்து தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் "மறுபரிசீலனை செய்யப்படும்" எனப் பதிலளித்திருந்தார்.

தவெக தரப்பில் முன்னதாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், ரிக்கி ரதன் பண்டிட் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், விஜய்க்கு நீண்டகாலமாக ஆலோசகராகவும் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சட்டமன்றத்தில் ஒருமித்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அரசு இந்த நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

விஜய்

எதிர்க்கட்சிகளின் நியாயமான விமர்சனங்களுக்கு மதிப்பளித்து, உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செயல் அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. தவறு எனச் சுட்டிக்காட்டப்பட்ட விஷயத்தில் பிடிவாதம் பிடிக்காமல், அதனைச் சரிசெய்து கொள்வது ஒரு முதிர்ச்சியான தலைமைக்கு அழகு என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.