மகாராஷ்டிராவில் வெயிலுக்கு 109 பேர் பலி... 3 லட்சம் பேர் பாதிப்பு - மாநிலம் தழுவிய ரெட் அலர்ட்!

 
வெயில் வெப்பம் வெயில் வெப்பம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கிய சில வாரங்களிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது பொதுமக்களைக் பீதியடையச் செய்துள்ளது.

இதுவரை 109 பேர் வெப்பத் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இதில் நந்துர்பார் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, அங்கு மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 3.34 லட்சம் பேர் நீர்ச்சத்து குறைபாடு, தலைச்சுற்றல் மற்றும் வெப்பம் தொடர்பான உடல்நல பாதிப்புகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜல்கான், அக்கோலா மற்றும் விதர்பா பகுதிகளில் வெப்பநிலை 45° செல்ஸியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது.

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்

நிலைமை மோசமடைந்து வருவதால், மகாராஷ்டிர முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'வெப்பத் தாக்குதல் சிகிச்சை பிரிவுகள்' (Heatstroke Units) 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. போதுமான அளவு மருந்துகள் மற்றும் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க, பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வெட்டவெளியில் பணியாற்றுவோர் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனச் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும், இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.