திருமண விருந்தில் சிக்கன் பரிமாறியதால் மணமகள் வீட்டாருடன் மோதல் - 12 பேர் படுகாயம்!

 
சிக்கன்

பீகார் மாநிலத்தில் திருமண விருந்தில் மட்டனுக்குப் பதிலாகச் சிக்கன் பரிமாறப்பட்டதால், மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலாக வெடித்ததில் 12 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம், சிம்ரி பக்தியார்பூர் நகரில் முகமது அன்வர் என்பவரின் மகன் முகமது அப்துல்லாவிற்கும், முகமது ஜாவேத் என்பவரின் மகளுக்கும் கடந்த வியாழக்கிழமை முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணச் சடங்குகள் முடிந்ததைத் தொடர்ந்து, அங்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் திருமண விருந்து பரிமாறப்பட்டது. அந்த விருந்தில் சிக்கன் உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார், தங்களுக்கு 'மட்டன்' விருந்து அளிப்பதாகக் கூறிவிட்டு ஏமாற்றி விட்டதாக மணமகள் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிக்கன் பக்கோடா

விருந்தில் தொடங்கிய இந்தச் சாதாரண வாய்வார்த்தை, சில நிமிடங்களிலேயே இரு தரப்பிற்கும் இடையே பெரும் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த இரு தரப்பு ஆதரவாளர்களும் அங்கிருந்த கம்பு மற்றும் நாற்காலிகளை எடுத்து பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த மோதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகளில், திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கையில் பெரிய கம்புகள் மற்றும் வாள்களை ஏந்தி, விருந்தினர்களைக் கொடூரமாகத் தாக்குவதும், வாள்களை வீசி மிரட்டுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

திருமண மண்டபமே போர்க்களமாக மாறியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்தத் திடீர் மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிம்ரி பக்தியார்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விநோத மற்றும் வன்முறைச் சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.