13 பேர் மரணம்... இமாச்சலில் டாடா சுமோ மீது ராட்சத பாறை உருண்டு விழுந்து துயரம்!
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஓடி வந்த டாடா சுமோ வாகனம் மீது மலையிலிருந்து பயங்கர வேகத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததில், வாகனத்தில் பயணித்த 13 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள ஆபத்தான மலைப் பாதையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பா மாவட்டத்தின் கில்லார் - உதய்பூர் சாலையில், பங்கி பள்ளத்தாக்கு பகுதியில் 13 பயணிகளுடன் டாடா சுமோ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக உயரமான மலையிலிருந்து பிரம்மாண்டமான ராட்சத பாறை ஒன்று பயங்கர வேகத்தில் உருண்டு வந்து ஓடிக்கொண்டிருந்த சுமோ வாகனத்தின் மீது நேராக விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த பயணிகள் 13 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்ததும் அப்பகுதி அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்: பாறை விழுந்து உருக்குலைந்த வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
விபத்து காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, பாதையைச் சீரமைக்கும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த கில்லார் - உதய்பூர் பாதையானது மிகவும் கரடுமுரடான மற்றும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிறைந்த நிலப்பரப்பாகும்:

குறிப்பாகத் தற்போது நிலவும் பருவமழைக் காலத்தில், இந்தச் சாலையில் திடீர் பாறைச்சரிவுகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறி வானிலை ஆய்வு மையம் தற்போது 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
