இந்தோனேசியாவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து - 14 பேர் பலி; 40 பேர் காயம்!

 
இந்தோனேஷியா ரயில் இந்தோனேஷியா ரயில்

இந்தோனேசியாவின் பெகாசிபகுதியில் உள்ள பெகாசி திமூர் ரயில் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 28, 2026) காலை நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக நின்றுகொண்டிருந்த ஒரு உள்ளூர் பயணிகள் ரயில் மீது, பின்னால் வந்த அதிவேக விரைவு ரயில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பெகாசி நகரில் உள்ள அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேஷியா

விபத்து நடந்தவுடன் மீட்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ரயிலில் இருந்த மற்ற 200-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எப்படி வந்தன என்பது குறித்து இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்னல் குறைபாடு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது மனிதத் தவறுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நடந்த தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்தோனேஷியா நிலநடுக்கம்

இந்தோனேசிய அதிபர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.