எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு - பாறைகள் விழுந்து 14 பேர் பலி!

 
எத்தியோப்பியா நிலச்சரிவு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாகக் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்தின் மீது பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எத்தியோப்பியாவின் அம்மாரா பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்தில் நேற்று முன்தினம் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் எதிர்பாராதவிதமாகக் கனமழை பெய்துள்ளது.

மழை காரணமாக மலையிலிருந்து பிரம்மாண்டப் பாறைகளும் மண்ணும் திடீரெனச் சரிந்து வந்து, வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரச் சம்பவத்தில் வழிபாட்டுத் தலத்தில் இருந்த 14 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், படுகாயமடைந்த 7 பேரை மீட்புப் பணிகளின் மூலம் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேலும் சிலர் சிக்கியுள்ளனரா என்பது குறித்துப் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.