மியான்மரில் கொடூரம்: பௌத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல் - 14 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
மியான்மர்

மியான்மர் நாட்டின் மத்திய சாகைங் பகுதியில் உள்ள பௌத்த மடம் ஒன்றின் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாயினர்.

சாகைங் பகுதியில் மண்டலேவிற்கு மேற்கே சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள 'ஸ்வெல் லே ஓ' கிராமத்தில் இயங்கி வரும் பௌத்த மடத்தின் மீது ஆகஸ்ட் 21 காலை 9 மணியளவில் ராணுவப் போர் விமானம் ஒன்று திடீரென இரண்டு சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த மடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வான்வழித் தாக்குதலில் 3 பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகப் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என்வே தெரிவித்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த அந்நாட்டு ராணுவம் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.