சீனாவில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு.. 275 பேர் படுகாயம்!
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் பல பகுதிகள் இயற்கை சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹுபே மாகாணத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையின் காரணமாக அங்குள்ள ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி இதுவரை 275 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஹுபே மாகாணம் மட்டுமன்றி, கன்சு மாகாணத்திலும் வானிலை மோசமடைந்துள்ளது.
கன்சு மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணுக்குள் புதைந்து போன அவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் அந்நாட்டின் மீட்புக்குழுவினர் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் இயற்கை சீற்றத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
