கென்யாவில் பள்ளி மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து - 17 மாணவிகள் பலி; 79 பேருக்கு தீக்காயம்!

 
கென்யா தீ விபத்து பள்ளி விடுதி கென்யா தீ விபத்து பள்ளி விடுதி

கென்யாவில் பள்ளி மாணவிகள் தங்கியிருந்த விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். 79 மாணவிகள் தீக்காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கென்யாவின் கில்கில் பகுதியில் உள்ள 'உதுமிஷி பெண்கள் மேல்நிலைப்பள்ளி' வளாகத்தில் உள்ள விடுதிப் பிரிவில் இரவு மாணவிகள் அனைவரும் தங்களது அறைகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென விடுதியின் ஒரு பகுதியில் தீப் பிடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே தீ ஒட்டுமொத்தக் கட்டடத்திற்கும் மளமளவெனப் பரவியது. தூக்கத்தில் இருந்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். எனினும், அடர்ந்த புகை மற்றும் தீயின் வீரியம் காரணமாகப் பல மாணவிகள் கட்டடத்திற்குள்ளேயே மாட்டிக்கொண்டனர்.

தீ விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடித்தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இக்கோர விபத்தில் சிக்கி 17 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயங்கள் மற்றும் கடுமையான புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 79 மாணவிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில மாணவிகளின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கென்யா தீ விபத்து பள்ளி விடுதி

தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் என்ன என்பது தற்போதைய முதற்கட்ட விசாரணையில் இன்னும் கண்டறியப்படவில்லை. மின் கசிவு (Short Circuit) காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் கில்கில் பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி விடுதியில் போதுமான அவசரக்கால வழித்தடங்கள் மற்றும் தீயணைப்புக் கருவிகள் இருந்தனவா என்பது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.