18 பேர் பலி; ஆலையிலிருந்து அமோனியா வாயுவை அகற்றும் பணிகள் 60% நிறைவு - கலெக்டர் கவிதா தகவல்!

 
வாயு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில், கடந்த மாதம் நேரிட்ட கொடூர அமோனியா வாயு கசிவு விபத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த தனியார் கடல் உணவுப் பதப்படுத்தும் ஆலையில் எஞ்சியுள்ள 2 டன் அபாயகரமான அமோனியா வாயுவை முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. இன்று நடைபெற்ற முதற்கட்டப் பணிகள் மூலம் சுமார் 60 சதவீத வாயு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.

கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த 'புனித பீட்டர் பால் கடல் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில்' கடந்த ஜூன் 21-ஆம் தேதி நள்ளிரவில் பயங்கர அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த ஆலையில் பணியாற்றி வந்த 18 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் 14 பெண் தொழிலாளர்கள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாயு

விபத்திற்குப் பிறகு ஆலை மூடப்பட்டாலும், அதன் பிரதான சிலிண்டர்கள் மற்றும் குழாய்களில் இன்னும் சுமார் 2 டன் அளவிலான திரவ அமோனியா வாயு தேங்கிக் கிடந்தது. இது மீண்டும் கசிந்தால் பெரும் ஆபத்து என்பதால், அதனைத் தீயணைப்புத் துறை மற்றும் சென்னை ஐஐடி நிபுணர்களின் உதவியோடு டேங்கர் லாரிகளுக்குப் பாதுகாப்பாக மாற்றி அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இன்றுகாலை இந்த அப்புறப்படுத்தும் பணி மிகவும் எச்சரிக்கையுடன் தொடங்கப்பட்டது. இதையொட்டிப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆலை இருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் உள்ள இதர தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இன்று ஒருநாள் முழு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு, மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

வாயு

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் எதிர்கொள்ளும் பொருட்டு, டஜன் கணக்கான தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் நடமாடும் சிறப்புக் காது-மூக்கு-தொண்டை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை வரை நடைபெற்ற அதிநவீன மீட்புப் பணிகள் குறித்துத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தொழிற்சாலையின் பிரதான சேமிப்புக் கலனில் எஞ்சியிருந்த அமோனியா வாயுவை நவீன உறிஞ்சு குழாய்கள் மூலம் டேங்கர் லாரிகளுக்கு மாற்றும் பணி இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதில் 60 சதவீத பணிகள் இன்று மாலைக்குள் பாதுகாப்பாக நிறைவடைந்துள்ளன. ஆலையின் உள்பகுதிகளில் உள்ள இரும்புக் குழாய்களுக்குள்  தேங்கியிருக்கும் மீதமுள்ள அமோனியா வாயுவை அகற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நாளை காலை மீண்டும் தொடங்கப்பட்டு முழுமையாக முடிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை" என்று அவர் உறுதியளித்துள்ளார்.