21 பேர் பலி... பட்டாசு ஆலைகளுக்கு நயினார் நாகேந்திரன் முக்கிய வேண்டுகோள்!
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் நிகழ்ந்த கோர விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உயிரிழந்த தொழிலாளர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி தன்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இக்கொடூர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ஆலைகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளில், கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பட்டாசு ஆலைகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்: வெடிமருந்துகளைப் புழங்கும் ஆலைகள் கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு கூடுதல் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.
லாபத்தை விடத் தொழிலாளர்களின் உயிரே முக்கியம் என்பதால், பாதுகாப்பில் ஆலை நிர்வாகங்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
