அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து கோர விபத்து: 250 பேர் மாயம்.. தேடும் பணி தீவிரம்!

 
படகு கவிழ்ந்து படகு கவிழ்ந்து

தெற்கு வங்கதேசத்தின் டெக்னாஃப் பகுதியிலிருந்து சுமார் 280-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு மலேசியா நோக்கிச் சென்ற மீன்பிடிப் படகு , அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் படகின் கொள்ளளவை விட அதிகப்படியான நபர்களை ஏற்றியது ஆகியவையே இந்தப் படகு கவிழக் காரணம் என ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் படகில் மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

படகு கவிழ்ந்து

உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலப்படி, படகு கவிழ்ந்த பிறகு சுமார் 36 மணி நேரம் அவர்கள் கடலில் தத்தளித்துள்ளனர். பலர் மூச்சுத்திணறல் காரணமாகப் படகு கவிழ்வதற்கு முன்பே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தோனேசியா நோக்கிச் சென்று கொண்டிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 'மேக்னா பிரைடு' என்ற வணிகக் கப்பல், கடலில் மிதந்து கொண்டிருந்த 9 பேரைக் கண்டுபிடித்து மீட்டது.

மீதமுள்ள சுமார் 250 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்டவர்களில் 6 பேர் மனிதக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டு, அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

படகு கடல் கவிழ்ந்து

"இந்தப் பேரழிவு, ரோஹிங்கியா மக்களின் நீண்டகால இடப்பெயர்ச்சி மற்றும் அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு இல்லாததையே காட்டுகிறது" என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இது போன்ற ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்வது தொடர்கதையாகி வருகிறது.