லாரி - பேருந்து மோதி குழந்தைகள், 13 பெண்கள் உட்பட 27 பேர் பலி; பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அறிவிப்பு!
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பரானா மாநிலத்தில், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

இம்புட்டுவா நகரில் இருந்து குரிடிபா நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் சென்ற சிறிய ரகப் பேருந்து மீது, எதிரே வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 13 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டுப் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பரானா மாநில ஆளுநர் ரடின்ஹோ ஜூனியர், மாநிலம் முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
