குப்பை மேட்டில் பயங்கர நிலச்சரிவு - கினியாவில் 30 பேர் பலி!
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், கனமழை காரணமாகக் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கினியா நாட்டின் தலைநகரான கொனக்ரியில் உள்ள 'டார் எஸ் சலாம்' என்ற பகுதியில் பிரம்மாண்ட குப்பை மேடு அமைந்து இருந்தது. இந்த அபாயகரமான குப்பை மேட்டின் அடிவாரத்தில் பொதுமக்கள் பலர் தற்காலிகக் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அதிகாலை 2 மணியளவில் குப்பை மேட்டில் திடீரெனப் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது.

மலையெனக் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில், அங்குள்ள குடிசைகள் சேறும் சகதியுமாகக் குப்பைகளுக்குள் புதைந்தன. இதில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
