நைஜீரியாவில் கிராமத்தின் மீது ஆயுதமேந்திய கும்பல் துப்பாக்கிச் சூடு - 30 பேர் பலி!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 30 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடுனா மாகாணம், கவுரா பகுதிக்கு உட்பட்ட நரிடான் கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த ஆயுதமேந்திய மர்மக் கும்பல், அங்குள்ள பொதுமக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர்; மேலும் பலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் நரிடான் கிராமத்தைக் இலக்காகக் கொண்டு ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக தெற்கு கடுனா அமைதி மற்றும் பாதுகாப்பு நெட்வொர்க் அமைப்பின் தலைவர் தெரெக் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு நைஜீரியப் பகுதிகளில் தீவிரவாத மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பல்களின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
